kanagarajan எழுதியவை | அக்டோபர் 23, 2008

ஒரு விநாடியும் ஒரு யுகமும் : முன்னுரை

ஒரு விநாடியும் ஒரு யுகமும்

சிறுகதைத் தொகுப்பு

சத்யராஜ்குமார்

முன்னுரையிலிருந்து….
நன்றி !
இது எனது முதல் சிறுகதைத் தொகுப்பு. இருபது வருடங்களாய் பத்திரிகைகளில் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளிலிருந்து சலித்தெடுத்து தொகுத்தது இந்தப் புத்தகம். ஒரு சில கதைகள் இழையிலிருந்து பிரிந்து தனியே தெரியலாம். கடந்து வந்த பாதையை நினைவுகூறும் முகமாக இடம் பெற்றவை அவை. உதிரி உதிரியாய் பிரபல வாராந்திரிகளில் வெளிவந்து விட்டுப் போன கதைகளை ஆவணமாக்கும் முயற்சி இது.
இது பற்றிய சிந்தனையே இல்லாமலிருந்த எனக்குள் இதை தொகுத்தே ஆக வேண்டும் என்று தூண்டுகோலிட்டவர்கள் என் நெருங்கிய நண்பர்கள் சரசுராம், சித்ரன், பொன்.சுதா மற்றும் கனகராஜன். இந்த நால்வரின் உழைப்பும், ஊக்கமும் இதன் பின்னணியில் உள்ளது.
நானும் எழுத்துலகில் ஒரு சிறு தடம் பதிக்க முடிந்திருக்கிறது. அதற்குக் காரணமாயிருந்தவர்களை யோசித்துப் பார்க்க ஒரு இருபத்தைந்து வருடங்களாவது பின்னோக்கிச் செல்ல வேண்டும். பள்ளியில் படிக்கிற பிராயங்களில் வீடு நிறைய புத்தகங்கள் வாங்கிப் போட்ட அம்மா. நல்ல மதிப்பெண் வாங்கினால் பரிசாக புத்தகங்கள் வழங்கிய குப்பாண்டகவுண்டர் ஆரம்பப்பள்ளி. பள்ளிப் பருவத்தில் கதைப் புத்தகங்கள் படித்தாலே அப்பாக்கள் குதறி விடும் காலத்தில் எனது எழுத்து முயற்சியைக் கிள்ளியெறியாமல் தோன்றியதைச் செய் என்று கதவுகளைத் திறந்து வைத்த அப்பா. பரஸ்பரம் கூடி, படித்த புத்தகங்களை விமர்சித்து எழுத்தார்வம் வளர்க்கும் புக் க்ளப் போன்ற அமைப்புகள் என் ஊரில் அப்போது இருந்ததா தெரியாது. ஆனால் என் வீட்டுக்குள்ளேயே அப்படி ஒரு க்ளப் இருந்தது. சித்தி திலகாவையும், அம்மாவின் தம்பி கிருஷ்ணகுமாரையும்தான் சொல்கிறேன். நாவல்கள், சிறுகதைகள், தொடர்கதைகள் எல்லாவற்றையும் விலாவாரியாக விவாதிப்பார்கள். அப்படி விவாதிக்கப்படும் கதைகளை நாமும் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது அப்போதுதான்.
எழுதும் முயற்சியைத் தொடங்கியபோது இலக்கில்லாமல் சுடும் துப்பாக்கியைப் போல தாறுமாறாக இயங்கி வந்த எனக்கு சரியான இலக்கையும், நெறிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். அவருக்கும் எனக்கும் ஒரு தலைமுறை இடைவெளி வயதளவில் இருந்தாலும் என்னை ஒரு நண்பனைப் போல சரிசமமாய் அமர வைத்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறார். என் கதைகளைப் பற்றி அவரும், அவர் கதைகள் குறித்து நானும் மனம் திறந்து விமர்சித்து விவாதித்த நாட்களில் நான் பெற்றவை ஏராளம்.
எனது முதல் கதையை பிரசுரித்த சாவி அவர்கள். என்னை பெரிதாய் அறிமுகப்படுத்திய ‘இதயம் பேசுகிறது’ மணியன் அவர்கள். தொடர்ந்து என் கதைகளை சாவியில் பிரசுரித்து வந்த அங்கு பணியாற்றி பின்னர் தற்சமயம் விகடனில் பொறுப்பாசிரியராக இருக்கும் ரவிபிரகாஷ். குமுதத்தில் என் படைப்புகளை ஊக்குவித்து வந்த அதன் பொறுப்பாசிரியர் ப்ரியா கல்யாணராமன். நான் எழுதிய பல சிறுகதைகளுக்கு பரிசு கொடுத்து கவுரவித்த கல்கி. அதன் நிர்வாக ஆசிரியர் கி.ரா, ஆசிரியர் சீதாரவி அவர்கள் மற்றும் உதவி ஆசிரியர் பா.ராகவன். எனது சில படைப்புகளை சிறப்புச் சிறுகதைகளாய் வெளியிட்ட விகடன். இன்னும் தாய், சுபமங்களா, தினமணி கதிர்.
நிறைய எழுதி வந்த அந்த கால கட்டத்தில் எனது நடையிலும், சிந்தனையிலும் மாற்றம் கொண்டு வந்த எழுத்தாள நண்பர்கள் சரசுராம், மீனாட்சி சுந்தரம், சித்ரன், ஷாராஜ், கனகராஜன், மு.காந்தி, அமுதகுமார், ரேகா ராகவன்.
திருமணத்திற்குப் பிறகுதான் மனிதன் பக்குவம் பெறுகிறான் என்பார்கள். எழுத்தாளனும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். கவிதா எனக்கு மனைவியான பின் நான் எழுதிய கதைகளிலும், எடுத்துக் கொள்ளும் கருவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. இலக்கிய சிந்தனை அமைப்பு முதல் கல்கி, விகடன், கலைமகள், அமுதசுரபி என அத்தனை தரமான இதழ்களும் என் கதைகளுக்குப் பரிசு கொடுத்தது அதற்குப் பின்தான். இப்பவும் நான் எழுதாமலிருப்பதற்காக கோபித்துக் கொள்பவர்கள் பட்டியலில் முதல் நபர் கவிதாதான்.
கடைசியாய் இந்தப் புத்தகத்தை வெளியிட சம்மதித்த திருமகள் புத்தக நிலையம் பதிப்பகத்தினர்.
இன்னும் சில பேர்கள் விட்டுப் போயிருக்கலாம். அவர்களையும் சேர்த்து, மேற்சொன்ன அத்தனை பேருக்கும் சொல்லிக் கொள்ள நன்றி என்ற ஒற்றை வார்த்தை போதாது. எனவே மகிழ்ச்சியில் பனிக்கும் கண்களோடு இப்போது மவுனமாய் கை கூப்பி வணங்குகிறேன்.
- சத்யராஜ்குமார்
Virginia – 22030
USA

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.