ரூ.28.00க்கு சற்றே மேலான மதிப்புமிக்க மனிதர்களின் கதைகள்…

புதிய புத்தகம்பேசுது மார்ச் 2015 இதழில் நூல் மதிப்புரை

மறுபடியும் (சிறுகதைத் தொகுப்பு)

– காளிங்கராயன்

ரூ.28.00க்கு சற்றே மேலான மதிப்புமிக்க மனிதர்களின் கதைகள்… மேலும் கனகராஜனின் கதைகளை, எளிய மனிதர்கள் தமது அசாதாரண தருணங்களை இயல்பாகக் கடந்து செல்வதைப் பற்றிப் பேசுகிற எளிமையான கதைகள் எனவும் வகைப்படுத்தலாம். எளிமை என்றால் பாவனைகள் சூழ்ந்த மொண்ணைத்தனமான எளிமை அல்ல. அது தீர்க்கமான உண்மையின் எளிமை.

வறுமையின் கொடுந்துயர் குறித்து, இடதுசாரி எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதிவந்த பொழுது, மூன்று வேளை சோறு கிடைத்தால்போதும் பல தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்திவிடுவார்கள் என்று பலரும் அவர்களைப் பகடி செய்தனர். ஊர்தோறும் சுற்றியலைந்த கவிஞர் பிரமிள் தொடங்கி, “இங்கே நல்ல மதுவும், ஆலிவ்காயும்கூடக் கிடைப்பதில்லை, என்ன தேசம் இது” என்பதாக அலுத்துக் கொள்ளும் சாருநிவேதிதா வரை பலரும் பலவிடங்களில் பல மொழிகளில் இதனைச் சொல்லியிருக்கிறார்கள். அதேவேளை, காமம் குறித்துப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறார்கள். பசி, பட்டினி பற்றி எழுதக்கூடாதா என்கிற எதிர்க்கேள்விகளும் முன்வைக்கப்பட்டன. கேள்விகளும் எதிர்க்கேள்விகளும் இன்றும் தொடர்கின்றன. அவற்றினூடாக பசி, காமம், குரோதம்… என அனைத்துவிதமான மனித மன உணர்வுகள் குறித்த எழுத்துக்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

இங்கே கனகராஜனின் பெரும்பாலான கதைகளில் பேசுபொருள் சில பத்துகள், சில நூறுகள்… என சிறுதொகைக்காக அல்லாடும் எளிய மனிதர்கள்தான். அத்தகைய வெம்பாடுகளுக்கிடையே பொய்கள், பாவனைகள், துரோகங்கள், ஏமாற்றுதல்கள்… போன்றவை குறித்த அறவியல் கேள்விகள் கதைசொல்லியால் நுட்பமாக எழுப்பப்படுகின்றன. ஊரை அடித்து உலையில் போட்டு ஈட்டிய ஆயிரமாயிரம் கோடிகளில் புரண்டுகொண்டிருப்பவர்களிடம் கிஞ்சித்தும் உருவாகாத அறவியல் சார்ந்த கேள்விகள், பத்தும், நூறும் மட்டுமே கைகளில் புழங்கும் எளிய மனிதர்களுக்குள்தான் எழுந்து அலைக்கழிக்கின்றன. அத்தகைய அறம்சார் விழுமியங்களுக்குத் தம்மை ஒப்புக் கொடுக்கிறவர்களாக கனகராஜனின் எளிய கதை மாந்தர்கள் அமைந்திருக்கிறார்கள். அதனூடாக மனிதமேன்மையினை அடைகிறவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள்.

தேனீருக்கு அழைக்கும் பாசாங்குகளில் திளைக்கும் நண்பன் தடுக்கும்பொழுதும், தான் கடன்வாங்கிய பணத்திலிருந்து முப்பது ரூபாயை எடுத்து தேனீர்க் கடையில் கொடுப்பதன் மூலம் புறக்கணிப்பு எனும் ஆயுதத்தால் அவன் முகத்திலறையும் இந்திரா (விலை), ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுத் தன் பணியிடத்திற்கே தேடிவரும் தனது உறவினரிடமிருந்து தப்பிப்பதற்காக கழிவறையின் நாற்றத்தில் புதைந்து ஒளிந்துகொள்ளும் மாதவன், இறுதியாக, ‘அவன் பாவம்’ என்று நெகிழ்ந்து, வக்கீல் குமாஸ்தாவிடம் ஆயிரம் ரூபாய் கடன்பெற்று அவனுக்குக் கொடுக்க முடிவெடுக்கும் அந்தத் தருணம் (வாழ்க்கையும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களும்) தனது மகனும் மருமகளும் தன்னைக் கையறு நிலையில் விட்டபோதும், பேரனின் முகத்தை நடுங்கும் கைகளால் தடவியவாறு, “அம்மாவையும் அப்பாவையும் கடைசிக் காலத்தில நல்லா பாத்துக்கணும் சாமீ” என்று சொல்லும் அப்பத்தாக் கிழவி (ஒரு அப்பத்தாவின் கதை). ஊதாரி நண்பனுக்கு தான் கடனாகக் கொடுத்த இருநூறு ரூபாயையே அவனது திருமணத்திற்கான மொய்யாகப் பரிமாற்றம் செய்திட முனைந்து அது முடியாமல் போன தர்மசங்கடத்தில் தவிக்கும் பார்த்திபன் (அவஸ்தை). இப்படியாக சில பத்துகளிலும் நூறுகளிலும் அதிகபட்சம் ஆயிரத்திலும் ஊசலாடிக் கொண்டிருக்கும் தமது மனிதத்தை அந்தப் பொருளை இழப்பதன் மூலம் காப்பாற்றிக் கொள்ளும் மனிதர்களையே கனகராஜனின் கதைகளில் நாம் காணமுடிகிறது. பொள்ளாச்சி என்கிற சிறு நகரத்திற்கு, அதைச் சூழ்ந்துள்ள சிறு கிராமப்புறங்களிலிருந்து தொழிலுக்காக, வணிகத்திற்காக வந்து செல்லும் சாதாரண மனிதர்களாகவே அவர்கள் இருக்கிறார்கள்.

கனகராஜனின் கதைமாந்தர்களைப் போலவே அவரது கதைமொழியும் எளிமையானதாகவே இருக்கிறது. முன்னுரையில் சரசுராம் சொல்லியிருப்பதைப் போல சிக்கலான தருணத்தில் ஒரு சிநேகிதனைப் போல நமது தோள்களைத் தட்டிக் கதை சொல்லும் எளிய உரைநடை மொழி. கனகராஜனின் பெரும்பாலான கதைகள் அதீத விவரணைகளோ, தத்துவ விளக்கங்களோ இன்றி எளிய உரையாடல்களின் வழியாகவே நகர்ந்து செல்கின்றன. உரையாடல்களினூடாகவே கதைக் காட்சிகளில் மாற்றங்களும் நிகழ்கின்றன.
பெரும் கூச்சல்களோ, பயமுறுத்தும் பாவனைகளோ எதுவுமின்றி, தாம் அறிந்தவற்றை, கண்டுணர்ந்தவற்றை நேரடியாக நம்முடன் உரையாடும் கனகராஜனின் மெல்லிய குரலை தனிக்குயிலின் துயரொலியாகக் கதைகளிலெங்கும் கேட்க முடிகிறது.

மறுபடியும்  (சிறுகதைத் தொகுப்பு)

கனகராஜன்

எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002.

தொலைபேசி : 04259 226012

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: