kanagarajan எழுதியவை | ஒக்ரோபர் 21, 2015

வீராதி வீரன்… ஷீலாவைக் காணோம்…

அப்போது அரண்மனை வீதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்குக்கு குடியிருந்தோம். ஆத்தா சொன்ன கதைகள், அம்மா சொன்ன கதைகள், பள்ளியில் மாணிக்க டீச்சர் சொன்ன கதைகள் என்று கதைகளால் எனக்குள் ஒரு உலகம் நிரம்பியிருந்தது. கதை புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை. கதை புத்தகம் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வீட்டில் வசதி இல்லை. அப்பாவுக்கு சங்கீதத்தில் ஆர்வம் என்பதால் பாட்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வருவார். பராசக்தி, திருமலை தென்குமரி, அம்பிகாபதி, அகத்தியர் என்று சில சினிமா பாட்டுப் புத்தகங்கள். அதுபோக என்.எஸ்.கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன், சந்திரபாபு, திருச்சி லோகநாதன், டி.ஆர்.மகாலிங்கம், கண்டசாலா தனிப்பாடல் புத்தகங்கள். சினிமா பாட்டு புத்தங்களுக்குப் பின்னால் இருக்கும் கதைச்சுருக்கம் படிக்க ஆர்வமாக இருக்கும். மீதியை வெள்ளித்திரையில் காண்க என்று முடிவில்லாத கதைகளோடு கதைப் புத்தகங்கள் தேடும் ஆர்வம் அதிகரித்தது. கதைப் புத்தகம் வேண்டும் என்கிற அரிப்பைத் தாங்க முடியாமல் அப்பா ஏதோ ஒரு கதைப் புத்தகத்தை வாங்கி வந்தார். அது ஒரு படக் கதைப் புத்தகம். (அந்த படக்கதை புத்தகம் அநேகமாய் மாலைமதி காமிக்ஸ் புத்தகமாக இருக்கலாம்) அந்த புத்தகத்தில் நான் எதிர்பார்த்த கதை இல்லை. நரி இல்லை. சிங்கம் பேசவில்லை. மந்திரவாதி வரவில்லை. ராஜா ராணி இல்லை. அந்த புத்தகத்தை நான் படித்தேனா என்பதுகூட நினைவில் இல்லை. ஆனால் அதில் உள்ள படங்களும் சில காட்சிகளும் எனக்குள் பதிந்துதான் போயிருந்தன. பின்னாளில் அந்த படக்கதைப் புத்தகத்தில் வந்த நபர்களைச் சந்தித்தேன். அவர்கள் ரிப் கெர்பி கதையில் வரும் கதாபாத்திரங்கள்…. பின்னாளில் தவமணி அண்ணன் வீட்டு புத்தகப் புதையலில் ரிப் கெர்பியையும் அந்த கதாபாத்திரங்கள‍ையும் சந்தித்தேன்.
நான் நான்காம் வகுப்பு வந்தபோது என் கதைப் புத்தகத் தொல்லை தாங்க முடியாமல் எதிர்வீட்டில் குடியிருந்த பஞ்சாங்க அய்யர் வீட்டில் இருந்து இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்தார். இரண்டுமே கல்கி வாரஇதழ்கள். நான் தேடும் படங்களும் கதைகளும் அதில் இல்லை. அதில் வந்த ஒரு விமானக் கடத்தல் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
நான் கேட்கும் புத்தகம் இதுவல்ல என்று மீண்டும் கதைப் புத்தகம் கேட்டுத் தொந்தரவு செய்ய, பஞ்சாங்க அய்யர் வீட்டில் எனக்காக வீடெல்லாம் தேடி அவர்கள் வீட்டு அட்டாலியில் (பரண்?) பைண்ட் செய்யப்பட்ட இரண்டு பழைய புத்தகங்களை எடுத்துக் கொடுத்தார்கள்.
புத்தகங்களைப் பிரித்த நான் பரவசத்தில் ஆழ்ந்துவிட்டேன். இரண்டு படக்கதைகள். கொஞ்சம் சிறுவர் கதைகள். இரண்டு பக்க சிறு படக்கதைகள்… கதையை எழுதியவர் பெயர் வாண்டுமாமா என்றிருந்தது. பழைய கோகுலம் இதழிலிருந்து தொகுக்கப்பட்டிருந்த படைப்புகள். அன்றைக்குப் பார்த்து காலாண்டு விடுமுறை விட்டிருந்தார்கள். என் அப்புச்சி வக்கம்பாளையத்தில் ஒரு டாக்டருக்குச் சொந்தமான தோப்பில் தென்னை மரம் ஏறி தெளுவு இறக்கிக் கொண்டிருந்தார். (அங்கேதான் கரையெல்லாம் செண்பகப் பூ படம் எடுத்தார்கள்) அமுச்சிக்கு கருப்பட்டி காய்ச்சுகிற வேலை. ஓலைச் சாளைக் குடியிருப்பு. இரண்டு மாமாக்களுக்கு கல்யாணம் ஆகி ஒருவர் கோட்டாம்பட்டியிலும், இன்னொருவர் பக்கத்துக் காட்டிலும் மரமேறிக் கொண்டிருந்தார்கள். ஒரு மாமா டெய்லர் கடைக்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார். இன்னொரு மாமா அப்புச்சியுடன் மரமேறிக் கொண்டிருந்தார்.
காலாண்டு விடுமுறை நாட்கள் வக்கம்பாளையத்தில் கழிந்தன.
பைண்ட் செய்யப்பட்ட தொடர் படக்கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன். முதலில் படித்த கதை வீராதி வீரன்... ஒரு சிறுவன். அவனுக்கு உதவியாக ஒரு கிளி, நாய், குரங்கு என்று சில விலங்குகள். இராணுவ பின்னணிக் கதை. இரண்டாவதாகப் படித்த கதை ஷீலாவைக் காணோம். கடத்தல் கும்பலிடமிருந்து ஷீலாவை ஒரு நாய் காப்பாற்றும் கதை. இடையில் நந்து சுந்து மந்து… மாதிரியான நகைச்சுவை படக்கதைகள்.
அந்த விடுமுறை முழுக்க அந்த புத்தகத்தைத் திரும்பத் திரும்ப படிப்பதுதான் என் வேலை. வாழைத் தோப்பு, கயிற்றுக் கட்டில் கிணத்துமேடு, வாய்க்கால் வரப்பு என்று அந்த புத்தகங்களோடு அலைந்தேன்.
அதற்குப் பின்னால் வேறு எந்த கதைப் புத்தகமும் படிக்கக் கிடைக்கவில்லை.
ஆறாம் வகுப்பு வந்த பின்னால் கதைத் திரட்டு என்கிற துணைப் பாட நூல் இருந்தது. அதில் முழுக்க கதைகள். ஆறாம் வகுப்பு வந்த கொஞ்ச நாட்களில் சமத்தூருக்கு நூலகம் வந்தது. காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் கணக்கு ஆறுச்சாமி வாத்தியார் நூலகம் வந்திருக்கும் தகவலைச் சொல்லி உறுப்பினராகச் சொன்னார்.
ஐந்து ரூபாய் கட்டணத்திற்காக வீட்டில் அழுது கெஞ்சிக் கொண்டு உறுப்பினராகச் சேர்ந்தேன். பிரதிபா ராஜகோபாலன் எழுதிய ஒரு தேவதையின் பகல் நேரங்கள் என்கிற புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்தேன். ஏதோ தேவதைகள் கதை…  மந்திர மாயம் / ராஜா ராணி இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு அதைப் படித்தேன். இரண்டு பக்கங்கள்கூட படிக்க முடியவில்லை. கதை புரியவில்லை. அது ஒரு நாவல்… அடுத்தநாள் பாலகிருஷ்ணன் நூலகத்திற்கு கூட வந்தான். அவன்தான் சிறுவர் நூல்கள் இருக்கும் இடத்தைக் காட்டினான். அரசகுமாரி ஆயிஷா வாண்டுமாமா என்கிற புத்தகத்தைப் பார்த்தவுடன் எடுத்துவிட்டேன்.
அதற்குப் பின்னால் எத்தனை புத்தகங்கள்….

P_20151021_172446 par2
பள்ளியில் நூலகம் செல்வதற்கும், புத்தகங்கள் வாசிப்பதற்கும் என்று சில சக மாணவர்கள் அமைந்தார்கள். பாலகிருஷ்ணன், மோகன், அருணகிரி, வெங்கடேஷ், பாரதி ஆனந்த், குழந்தைவேல், சிவக்குமார், சண்முகசுந்தரம், மெட்ராஸ் கணேசன் என்று… காட்டுச் சிறுவன் கந்தன், பச்சைப் புகை, நீலா மாலா, பர்மா ரமணி, சங்கர்லால், தமிழ்வாணன் என்று எங்களால் பேசிக் கொள்ள முடிந்த அந்த காலங்கள் இன்றைக்கும் ஆச்சரியமாக உள்ளது.
விளையாட்டுக்காக ஃரப் நோட்டில் ஆளுக்கு ஒரு அத்தியாயம் என்று தொடர் கதைகள் எழுதினோம்.
பாலகிருஷ்ணன் வீட்டில் கதைப் புத்தகங்கள் வாங்குவார்கள். ரத்னபாலா, முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ், திகில் காமிக்ஸ் கிடைக்கும்.
நூலகத்திற்குப் பின்னால் எனக்கு இன்னொரு நூலகமாய் அமைந்தது தவமணி அண்ணன் வீடு.
பல அற்புதமான கதைகளை அங்கே படித்தேன். துப்பறியும் சாம்பு படக்கதைகளை தனியாக எடுத்து தைத்து வைத்திருந்தார். ரத்னபாலாவில் தனியாக கிழித்து பைண்ட் செய்ய வசதியாக படக்கதைகள் வரும். சோவியத் நாடு போன்ற அபூர்வமான இதழ்கள் தவமணி அண்ணனிடம் இருந்தன. இந்துமதி ஆசிரியராக இருந்த அஸ்வினி, ஜெயகாந்தனின் கல்பனா மாத நாவல், மணியன் மாத நாவல், செம்மலர் என்று நிறைய படிக்க முடிந்தது.
வாண்டுமாமா புத்தகங்கள் நாவல்களும் சிறுகதைகளும் கிடைத்தனவே தவிர, படக்கதை புத்தகங்கள் கிடைக்கவில்லை. உயர்நிலைப் பள்ளி நாட்களில் வீராதி விரன், ஷீலாவைக் காணோம் படக்கதை புத்தகங்கள் திரும்பப் படிக்க ஆர்வம் கொண்டு தேடியபோது கிடைக்கவில்லை.
பின்னாளில் பார்வதி சித்திரக்கதை தொடர்ச்சியாக வாங்கிக் கொண்டிருந்தேன். அதில் வீராதி விரன், ஷீலாவைக் காணோம் படக்கதைகள் திரும்பவும் வெளிவந்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

பிரிவுகள்

%d bloggers like this: