பழைய சோறு : கவிதைகள்

என்னுடைய பழைய சோறு என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து…

பழைய சோறு
கவிதைத் தொகுப்பு
கனகராஜன்

காலச் சக்கரம்

நேற்றைக்குப் போனது
ஒரு நாள்
இன்றைக்கும் போகிறது
ஒரு நாள்
நாளையும் போய்விடும்
ஒரு நாள்
தொலைந்து போகின்றன
நாட்கள்

நேற்றைக்குப் போல
இன்றைப் போல
நாளைப் போல
எதுவும் கிடைப்பதில்லை
நினைவுகளைத் தவிர

நானே எனக்கு
எப்போதும் போல
கிடைப்பதில்லை
நீங்கள் எனக்கு
கிடைப்பதைப் போலத்தான்.

கணையாழி ஏப்ரல் 93

ஜன்னலோரம்

கலங்கின குட்டைச்
சேற்றில் எருமை
கிடக்கிறது

எப்போது எழுந்து
போகும் என்று தெரியவில்லை
கொம்பின் மேல்
கொக்கு

எப்போது பறந்து
போகும் என்று தெரியவில்லை
அதற்குள் பஸ்
வேகமாய்ப் போய்விட்டது.

தினமணி கதிர் 12. 06. 1996

புன்னகை புரிய…

புன்னகைகளின் இழப்பை
எப்படிச் சொல்வது?
எதிரே வரும் உன் முகம்
என் புன்னகையை எதிர்பார்க்குமா?
புன்னகைக்க யோசித்திருக்குமா?

புன்னகை புரியும் நேரம்
புரியுமென்றால் புரியலாம்.
புன்னகை நிஜமென்றால்
புன்னகை கொள்ளலாம்

எதிர்முகம் எப்படியோ?
என்ன யோசனையோ?
நாம் வலியவும் புன்னகை
அணிந்து சிரிக்கலாம்

புன்னகை என்பது
நிஜமென்பதாயும்
பொய்யென்பதாயும்
இருக்கலாம்

எதுவாயினும்
புன்னகையைப் புரிந்தே
புன்னகை புரியலாம்

புன்னகை என்பது
சின்ன துவக்கம்
நீண்ட பேச்சின்
அஸ்திவாரம்

சின்னதாய் பெறும்
ஆறுதல்
வழங்கவும் வாங்கவும்
அணிந்து பழக வேண்டும்
முகங்கள்.

மவ்னம் அக்டோபர் 1993

இழவு ஆள்

எப்போதாவது வருவார்
இழவு சொல்ல சொக்கமுத்து

‘சாமீயேய்ய்…’ கதவிற்கு
பத்தடி தூரம் நின்ற அவர்
குரல் அடையாளமாய் ஒலிக்க
‘இப்போது யாரோ…?’
பயத்துடன் முகம் தூக்கும்.

‘பட்டாளத்துப் பண்ணாடி
போயிட்டாருங்க…’ என்பார்.

‘அடப்பாவமே…’ வேதனையில்
வெடிக்கும் அப்பாவின் குரல்

‘நேத்து ரவைக்குப்
பண்ணெண்டு மணிக்குங்கோ…
ஒரு வாரமா கெடையில
கெடந்தாருங்கோ…’

கையில் அஞ்சோ பத்தோ
வாங்கிக் கொண்டு போவார்
வழிச் செலவுக்கு

அதற்குப் பின்னால்
கிராமம் நோக்கிய
பயண ஏற்பாடுகள்

கல்வாழை இலையில்
ஈர்க்குச்சிகள் கோர்த்து
சாப்பிடுகிற செல்லமுத்து
மொட்டையடித்து
காது குத்திய சின்ன வயதில்
அதட்டி மிரட்டியது
இன்னும் மனசுள்
பயம் நிரம்பி நிற்கிறது

இழவு சேதிக்காக மட்டுமல்லாமல்
எப்போதேனும் விஷேச
சேதிகள் சொல்லவும்
வருகிறவர்தான்

சொக்கமுத்துவின்
வருகை நின்று போய்
அவரை மறந்து போன
ஒரு நாளில்
சொக்கமுத்துவின் மகன் மாரி வந்தான்
‘தெக்காலக் காட்டு அத்தை
காலமாயிட்டாங்க…’ என்றான்

‘மாரி சொக்கமுத்து வரலையா?’

‘அப்பன் செத்து
ஒரு மாசம் ஆச்சுங்க…’ என்றான்.

மவ்னம் ஜனவரி 1994

பாடம்

முத்துக்குமாரின்
மூன்றாம் வகுப்பு
புத்தகத்தில் சில
விசித்திரங்கள் உண்டு

மீசை முளைத்த
புத்தர்

நாமத்தோடு
அலெக்சாண்டர்

‘நான் உன்னே
காதலிக்கறோன்-’

குட்டி போட மயிலிறகு

வால்க ரஜினி

புத்தகமே படிக்கவில்லை
அவனும்
பாடமே நடத்தவில்லை
வாத்தியாரும்.

உங்கள் ஜூனியர் அக்டோபர் 1994

தட்டச்சுப் பெண்

தட்டச்சு ஒலிக்கிறது…
‘கூடவே வருவேன்…’ என்று
அழுது அடம்பிடித்த
குழந்தையின் அழுகைக்குரலின்
நினைவோடு

தட்டச்சு ஒலிக்கிறது…
காலையில் அலுவலகம் புறப்பட்ட
கணவனின் சட்டையை
அயர்ன் செய்யாமல் மறந்து
போனதற்கு வாங்கிக் கொண்ட
அடிகளோடு

தட்டச்சு ஒலிக்கிறது…
பஸ்ஸில் சரியாந்
சில்லறை கொடுக்க முடியாமல்
ஐந்து ரூபாய் நோட்டை நீட்டி
கண்டக்டரிடம் திட்டு வாங்கி
கூட்டத்தில் அவமானப்பட்டதை
நினைத்து வேதனைப் பட்டுக் கொண்டு…

தட்டச்சு ஒலிக்கிறது…
இரவில் கணவன் கோபத்தோடு
வீசிய சாப்பாட்டுத் தட்டுபட்டு
நெற்றியில் காயம்…

பிளாஸ்திரி போட்டு மறைத்தாயிற்று

விசாரிப்பவர்களிடமெல்லாம்
காலைத் தூக்கத்தில் எழுந்து
கதவில் முட்டிக் கொண்டதாய்
சொல்லிச் சொல்லி சமாளித்தபடி

தட்டச்சு ஒலிக்கிறது…
மனக்கவலைகளோடு…
பெருமூச்சோடு…
தடுமாறி…
எழுத்துப் பிழைகளோடு…

தட்டச்சு ஓய்கிறது…
எரிந்து விழுந்த அதிகாரியின்
கோபக் கத்தலில்
இவளை வேடிக்கை பார்க்கிறது
அலுவலகம்

தட்டச்சு ஒலிக்கிறது…
எங்கோ வெகு தூரத்தில்…

தட்டச்சு ஓய்கிறது…
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு
வெறும் வாழ்க்கை
வாழ்வதற்கு…

தினமணி மகளிர் மலர்1997
தினமணி – ஆக்ஸஸ் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை

எதிர்பார்ப்பு

ஆபிஸ் அலுப்பு தீர்ந்த பின்னால்
அப்படியும் இப்படியும்
நின்று நகர்ந்து
ஊர்ந்து செல்கிற பஸ்ஸில்
அடைத்து அடைத்து
நெறுக்கும் மனிதர்கள்
சண்டை போடும் மனிதர்கள்
சத்தம் போட்டு சிரிப்பவர்கள்

எதிலும் யோசனை இன்றி
வீட்டை அடையும்
நினைவில் இருப்பேன்

வீட்டை அடைந்த பின்னால்
வெறுமையாய்
கிடக்கும் என் மேசை
நேற்றுப் போலவே
இன்றைக்கும் கடிதம்
வராத நாளாய் உணர
வலி எடுத்து துடிக்கும் மனசு
வீட்டை அந்நியமாய்
தோன்ற வைக்கும்.

கணையாழி டிசம்பர் 1993

நம்பிக்கை
பணத்தின் முகத்தில்
விழித்தால்
கஷ்டம் தீரூமென்று
பக்கத்து வீட்டில்
ஒரு ரூபாய் கடன்
வாங்கி வந்து
நிலா முளைத்த
முதல் பிறையைப் பார்த்து
பணத்தின் முகத்தில்
விழிப்பாள் அம்மா
எல்லா மாசமும்.

தினமணி கதிர் (19.05.96)

மாற்றம்

பெரிய பாட்டி வீட்டு
மருதாணிச் செடி
விரல்கள்
சிவக்க வைக்க
ஆளின்றி
இலைகள்
பழுத்துக் கீழ்
உதிரும்
பேத்திமார்களிந்
நகங்களில்
பாலீஷ் வண்ண
பளபளப்பு.

தினமணி கதிர் (19.05.96)

மாற்றம்

அரச மரத்துக் கோவிலில்
கட்டித் தொங்கவிடப்பட்ட
கோவில் மணியின்
நாக்கு காணாமல்
போன நாளிலிருந்து
ஊமையாய்த் தொங்குகிறது

பள்ளிக்கூடத்துப்
பசங்களின்
கல்லடிபட்டு
கல்லடிபட்டு
அவலமாய் ஓசை
எழுப்பும்.

தினமணி கதிர் (19.05.96)

கொஞ்சம் கனவுகளோடு…

தரையை மறைக்கத்
தெரியாத பாயில் படுக்கை
கிழிசல் போர்வைக்குள்
அடங்காத குளிர்க்காற்று

மழை நீரை வடிக்கும்
சல்லடைக் கூரை
காற்றில் உயிர் துடிக்கும்
லாந்தர் சுடர்

இவற்றோடு
நாளைய விடியலுக்காக
கொஞ்சம் கனவுகளோடு
தூக்கமும்
வேண்டியதாக இருக்கிறது.

உங்கள் ஜூனியர் (நவம்பர் 94)

மறுவினைகள்

  1. வாங்க கனகராஜன். வாழ்த்துக்கள்.

    ரேகா ராகவன்.

  2. அன்பரே. . . கவிதைகள் மிக மிக அருமை. எண்ணத்தை கவர்கிறது. பாராட்டுக்கள்.

  3. Kavithaigal arumai

  4. கவிதைகள் பல, என்னை ஈர்த்தன. தொடர்ந்து எழுதுங்கள் கனகராஜன்.

  5. அன்பு அண்ணா வணக்கம்,இழவு சேதி கவிதை அருமை.ஒரு ஜோடி செருப்பும் இலக்கியவாதியும் அருமையான அனுபவம்.எனக்கும் அதை போல சம்பவங்கள் பண்பலை நேயர்களுடன் நேர்ந்ததுண்டு.அன்புடன்,எஸ்.தண்டபாணி,கரூர்.9442116216.

  6. ilavu seiti


புதுவைப்பிரபா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி